×

விவசாயிகளை பாதிக்கும் 3 மசோதாவை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜினாமா: அகாலி தளம் அறிவிப்பு; கூட்டணியில் பிளவு

புதுடெல்லி: மக்களவையில் சர்ச்சைக்குரிய 3 விவசாய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் சிரோமணி அகாலி தளத்தை சேர்ந்த உணவு பதனிடுதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இது, அக்டோபர் 1ம் தேதி வரை வார விடுப்பின்றி, 18 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

இதன் முதல் நாளான்று விவசாய உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவற்றை விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். ஆனால், விவசாயமும், சந்தைகளும் மாநிலங்களின் கட்டுப்பாட்டில் வரும் நிலையில், மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு இந்த மசோதாக்களை கொண்டு வந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும், இந்த மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப் உட்பட பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது.

இந்நிலையில், இந்த மூன்று மசோதாக்கள் மீதான காரசார விவாதம் நேற்று மக்களவையில் நடந்தது. இதில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்று, மத்திய அரசை கடுமையாக விமர்சித்தன. மேலும், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றுள்ள சிரோமணி அகாலி தளமும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. விவாதத்தின்போது பேசிய இக்கட்சித் தலைவரும், எம்பி.யுமான சுக்பீர் சிங் பாதல், மசோதாக்களை கண்டித்து தங்கள் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்வார் என்று அறிவித்தார். இதனால், அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி சுக்பீர் சிங் பாதல் கூறுகையில், ``மத்திய அமைச்சரவையில் பதவியில் இருக்கும் மத்திய உணவு பதனிடுதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். இந்த மசோதாக்கள் விவசாயத் துறையை மேம்படுத்த பஞ்சாப் மாநில அரசுகள் தொடர்ந்து எடுத்து வந்த முயற்சிகள், விவசாயிகளின் 50 ஆண்டு கால கடின உழைப்பை அழித்து விடும். உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய பஞ்சாப் பெரும் பங்களித்துள்ளது. எனவே, ஹர்சிம்ரத் கவுர் பாதல் மேம்படுத்த பஞ்சாப் மாநில அரசுகள் தொடர்ந்து எடுத்து வந்த முயற்சிகள், விவசாயிகளின் 50 ஆண்டு கால கடின உழைப்பை அழித்து விடும். உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய பஞ்சாப் பெரும் பங்களித்துள்ளது. எனவே, ஹர்சிம்ரத் கவுர் பாதல் மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்வார்,’’ என்றார்.

இதைத் தொடர்ந்து, ஹர்சிம்ரத் கவுர் தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பினார். அங்கிருந்து, அந்த கடிதம் பிரதமர் அலுவலகத்துக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஒரே கட்சியாக சிரோமணி அகாலி தளம் உள்ளது. மத்திய அமைச்சரவையில் இருந்து அதன் ஒரே அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் பாதல் விலகி விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னதாக, விவாதத்தை தொடங்கும் முன்பாக மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசுகையில், ‘‘இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டதால், ஏற்கனவே அமலில் உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்துக்கு எந்த பாதிப்பும் வராது. அதேபோல், மாநிலங்கள் அமல்படுத்தியுள்ள விவசாய உற்பத்தி சந்தை குழு சட்டத்தின் ஷரத்துகளை இந்த மசோதாக்கள் நசுக்காது.

விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதை இந்த விவசாய மசோதாக்கள் உறுதிப்படுத்தும். சந்தை கட்டுப்பாடு, விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களை யாருக்கு விற்கலாம் என்ற சுதந்திரம் ஆகியவற்றில் இவை தலையிடாது. அதுபோல், விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பதற்கு அரசுக்கு எந்த வரியும் செலுத்த தேவையில்லை. இந்த மசோதாக்கள் மூலம் விவசாயத் துறையில் தனியார் முதலீடு ஊக்குவிப்பு, சந்தை போட்டி ஆகியவை அதிகரிக்கும். இதன் மூலம், விவசாயத் துறையின் உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்படுவதுடன், வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும். இந்த மசோதாக்கள் விவசாயத் துறையின் சீர்திருத்த மசோதாக்களாகும். இதன் மூலம், விவசாயிகளுக்கு ஏற்றுமதியாளர்கள், பெரிய வர்த்தக நிறுவனங்களுடன் நேரடி தொடர்பு கிடைக்கும்,’’ என்றார். விவாதத்துக்குப் பிறகு இந்த 2 மசோதாக்களும் குரல் வாக்ெகடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது. ‘இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு,’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

* ஒருமணி நேரம் ஒத்திவைப்பு
உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பி. பல்லி துர்கா பிரசாத் ராவ் நேற்று முன்தினம் சென்னையில் காலமானார். இதையொட்டி நேற்று மக்களவை கூடியதும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவை 4 மணி வரை ஒருமணி நேரம் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். அதன் பிறகு அவை நடவடிக்கைகள் தொடங்கியது.

* பேஸ்புக் மீது விசாரணை
மாநிலங்களவைக்கு வெளியே பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால், ``பேஸ்புக், வாட்ஸ்அப் செயலிகளின் மிகப் பெரிய சந்தையாக இந்தியா விளங்குகிறது. ஆனால் இவை ஒருதலை பட்சமாக செயல்படுவதாக புகார் எழுந்தது. ஆனால் இதை யாரும் கண்டு கொள்ளவில்லை. எனவே இந்திய பேஸ்புக் நிறுவனத்தின் மீது பேஸ்புக் தலைமையகம் உயர் மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நாட்டின் தேர்தல் விவகாரத்தில் தலையிடுதல், கடந்த 2014 முதல் சமூக ஊடகங்களில் வெறுக்கத்தக்க பேச்சுகளை பதிவிட அனுமதித்தது உள்ளிட்ட பேஸ்புக் மீதான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற குழு விசாரிக்க வேண்டுமென்று மாநிலங்களவையில் காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது,’’ என்றார்.

Tags : Union Minister ,Split ,site announcement , Union Minister resigns over 3 bills affecting farmers: Akali site announcement; Split in alliance
× RELATED ராஜ்புத்திர சமூகத்தினர் பற்றி...